தோற்றுவாய்

இலங்கையில் பிரித்தானியாவின் காலனித்துவ ஆட்சியானது அறிவியல் கல்வியினை அறிமுகப்படுத்தியிருந்ததுடன், கிறிஸ்துவ மிஷனரிகளின் தோற்றம் மற்றும் செயற்பாடுகள் இந்து, பௌத்த, இஸ்லாமிய மறுமலர்ச்சிக்கான அருட்டுணர்வை ஏற்படுத்தியிருந்தது. இதனால் இக்காலத்தே நம் தமிழர்கள் இரு நிலைகளில் பயணித்தனர். அவை எவ்வாறு எனில்,

ஒரு சாரார் மதம் மாற்றப்பட்ட நிலையில் ஆட்சியாளர்களிடமிருந்து வரப்பிரசாதங்களை அனுபவித்த அதேவேளை ஆங்கிலக் கல்வியினை பெற்று மேற்கத்தேயமயப்பட்டு இருந்தனர்.

மறு புறத்தே இன்னொரு சாரார் மறுமலர்ச்சி சிந்தனையுடன் சைவத் தமிழையும் அதன் பண்பாட்டையும் பாதுகாக்கவென சைவத் தமிழர்களும் பலரும் இந்து மத நிறுவனங்களினூடாக தீவிரமாக தொழிற்பட்டனர்.

அந்த வரிசையில் இரண்டாவது பாதையை தெரிவு செய்த ஸ்ரீ ல ஸ்ரீ ஆறுமுகநாவலர், சைவத்தமிழ் மறுமலர்ச்சிக்கு வித்திட்டார். அவரது தடத்தை பின்பற்றியதில் இந்து வித்தியா விருத்தி சங்கத்தினை நிறுவிய Hindu Board இராசரத்தினம், Sir. பொன். இராமநாதன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். இவர்கள் முன்னெடுத்த முதல் தடத்தை பின்பற்றி சைவத்தமிழர்கள் தம் நவீன கல்வியறிவை வளர்க்க தலைப்பட்டனர். எது எவ்வாறாயினும் பிரித்தானியா காலத்தில் தமிழர்கள் தமது விடாமுயற்சி, கல்வி அறிவு வீத வளர்ச்சி, நிதித்தேட்டம் என்பனவற்றால் சமூகத்தின் உயர்ந்த நிலைகளில் விளங்கினர். இவை காரணமாக இவர்கள் அரசியல், பொருளாதார நிலையில் பெரும்பான்மையினராக விளங்கினர். தலைநகராம் கொழும்பில் அரசியல் அதிகாரம், அரச உத்தியோகம், வர்த்தகம், மற்றும் இன்னோரன்ன வசதி வாய்ப்புகள் கருதி பல்வேறு காலகட்டங்களில் நிரந்தரமாகவும், தற்காலிகமாகவும் வாழ்த்தலைப்பட்டனர்.

இவ்வாறான நிலையில் தலைநகாரில் வாழும் தமது பிள்ளைகள் இந்துத் தமிழ் பண்பாட்டுச் சூழலில் கல்விகற்று பயன்பெறவேண்டும் என்ற சிந்தனை சுதந்திர இலங்கையின் தேவையாக இருந்தது. காரணம் எமது நாட்டை விட்டு பிரித்தானியா அகன்று இருந்தபோதும் அவர்கள் அறிமுகம் செய்துவைத்த அரசியல் முறைமைகள், அறிவியல் கல்வி, ஆங்கில மொழி மற்றும் மேலைத்தேய கலாசாரம் என்பன நிலைத்திருந்தன. எனவே அவற்றுக்கு ஈடுகொடுக்கவல்ல தமிழர் சமூகத்தினை இந்து சமய சூழலில் உருவாக்கவேண்டிய தேவை தொடர்ந்த நிலையில் பல இந்துக் கல்லூரிகள் தொடர்தும் தோற்றம்பெற்றன.

தோற்றம்

இந்துத்தமிழ்ப் பாடசாலை ஒன்றின் அவசியம் கருதிய கொழும்பு வாழ் கல்விமான்கள், சைவ/இந்து மத பெரியார்கள், அரசியல் விற்பன்னர்கள், வர்த்தகர்கள், நலன்விரும்பிகள் எனப் பல சைவத் தமிழ் அபிமானிகளின் சங்கமானது 1951 பெப்ரவரி 5 இல் இடம் பெற்றது. இவர்களின் ஒன்றுகூடல் மூலம் அன்றே இந்து வித்தியா விருத்தி சங்கம்| நிறுவப்பட்டது. இதன் தலைமைப் பொறுப்பினை நீதி அரசர் திரு.செல்லப்பா நாகலிங்கம் அவர்கள் வகித்ததுடன் மேலும் இருபத்தி மூன்று பெரியார்கள் மேற்படி சபைக்கு தெரிவு செய்யப்பட்டனர். அவர்களின் அயராத உழைப்பினாலும் ஏனைய தமிழ் மக்களின் ஒத்துழைப்பினாலும் மிக விரைவிலேயே இந்துப்பாடசாலை தோற்றம் பெற்றது.

1951 பெப்ரவாரி 12 ஆம் திகதி “பிள்ளையார் பாடசாலை” எனும் திரு நாமத்துடன் எமது கல்லூரி ஸ்தாபிதம் ஆனது. இப்பாடசாலை பம்பலப்பிட்டி ஸ்ரீ சம்மாங்கோடு மாணிக்க விநாயகர் ஆலயம், ஸ்ரீ கதிரேசன் ஆலயம் ஆகியவற்றின் தர்மகர்த்தா சபையினரால் வழங்கப்பட்ட தரும சாசன காணியில் அமைக்கப்பட்டது. மேற்படி ஆலயத்தின் முதன்மை கடவுளரும் ஞானத்தின் திருவுருவமுமான விநாயகாரின் பெயரினால் ஆரம்பிக்கப்பட்ட இந்துப் பாடசாலையானது, அப்போது 55 மாணவர்களுடனும் இரண்டு தொண்டர் ஆசிரியர்களுடனும் இந்து வித்தியா விருத்தி சங்கத்தினரின் முகாமையின் கீழ் இயங்கியது.

“கற்றாங்கு ஒழுகுக” என்ற மகுட வாக்கியத்துடன் இயங்கி வரும் எமது கல்லூரியானது வித்தக விநாயகரின் அருளாலும் தமிழ் ஆர்வலர்களின் முயற்சியாலும் பெரு வளர்ச்சி கண்டு வருகின்றது. தமிழ் பண்பாட்டின் இருப்பிடமாகவும், இந்துக் கலாசாரத்தின் கருவுலமாகவும் திகழும் கொழும்பமர் இந்துக் கல்லூரியானது இன்றளவில் வானளாவும் புகழ் ஓங்கக் காரணமாக இருந்த இந்து வித்தியா விருத்தி சங்கத்தினாரின் ஸ்தாபக நெஞ்சங்களை நினைவு கூறுவது எமது கடமையாகும். அந்தவகையில் அவர்களின் பெயர்ப்பட்டியல் கீழ்வருமாறு அமைகிறது.

நிறுவுனர்கள்

  1. தலைவர். கௌரவ திரு. .நாகலிங்கம். (முன்னாள் நீதியரசர்)
  2. சம்மாங்கோடு பிள்ளையார் ஆலய தர்மகர்த்தா
  3. திரு. K. ஆழ்வார்பிள்ளை
  4. கலாநிதி. A.கந்தையா
  5. திரு. M.M. குல சேகரம்
  6. கலாநிதி. V. நடராஜா
  7. திரு. CK. இரத்தினம்
  8. திரு. S. செல்லமுத்து (முன்னாள் கொழும்பு மாநகர மேயர்)
  9. திரு. ஸ்ரீகாந்தா வைத்தியநாதன்
  10. திரு. N.T. சிற்றம்பலம்
  11. திரு. M.S. கந்தையா
  12. திரு. S. மகாதேவன்
  13. செனட்டர் பெரி. சுந்தரம்
  14. திரு. சங்கர் ஐயர் மகாதேவன்
  15. திரு. K.C. தங்கராஜா
  16. திரு. R.A. நடேசன்
  17. திரு. S. சோமசுந்தரம்
  18. செனட்டர் S. நடேசன்
  19. திரு. M. கனக சபை
  20. திரு. V.A. கந்தையா
  21. திரு. A. சுப்பிரமணியம்
  22. திரு. A. ரகுநாதர்
  23. திரு. K. சச்சிதானந்தா
  24. திரு. M. வைரமுத்த